தமிழகத்தில் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து சிறப்பு வகுப்புகள் வைக்கும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செய்து வருவதைப் போலவே பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்றது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், பஸ் பாஸ், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு புவியியல் வரைபடம், கிரையான்ஸ் கலர்ஸ், இலவச செருப்பு, புத்தகப்பை, வண்ண பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, ரெயின் கோட் முதலான பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
அது மட்டுமில்லாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 1500 ரூபாயும், 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடும் செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் தொகையானது மாணவர்கள் படிப்பை முடிக்கும் பொழுது அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டுக்குரிய பள்ளி வேலை நாட்கள் அடங்கிய நாள்காட்டி வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு மொத்தமாக 220 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மொத்த வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் தமிழகத்தில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து காலாண்டு விடுமுறையாக 3 நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளிகள் காலாண்டு விடுமுறை 10 நாட்கள் விடப்படும் என்றும் விடுமுறை முடிந்து அக்டோபர் 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் காலாண்டு விடுமுறையிலும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் சென்றுள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு வகுப்புகள் குறிப்பாக சென்னை, நெல்லை, நாகர்கோயில் போன்ற மாவட்டங்களில் நடத்தப்படுவதாகவும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் சென்றது.
இந்த புகாரை அடுத்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் “அரசின் உத்தரவை மதிக்காமல் பல பள்ளிகளில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். பல முறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து இது போல பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். சில நாட்களில் இந்த பள்ளிகளுக்கு அரசு சார்பாக நோட்டீஸ் அனுப்பப்படும். அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.