திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் அறிவிப்பு
12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் 12 மணி நேர கட்டாய வேலை என்னும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பும் செய்தனர்.
இந்தத் திட்டத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 12 மணி நேர கட்டாய வேலை என்னும் சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
கூட்டத்தில், 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன. வரும் 27ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. 12 மணி கட்டாய வேலை சட்டம் தற்போது திமுக அரசுக்கு மிகபெரும் சவாலாக உள்ளது.