பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பிராக்சி நிகம் பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரின் திறமையை பாராட்டாமல் பலரும் இவரின் உருவத்தை கேலி செய்து சோசியல் மீடியாவில் டிரோல் செய்து வருகிறார்கள்.
இந்த மாணவிக்கு பருவ வயது பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பாதிப்பு காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது. இதை பார்த்த பலரும் இளம் பெண்ணுக்கான முகமே இல்லை. மீசை தாடி வளர்ந்துள்ளது. நிகம் அவரின் அழகில் கவனம் செலுத்த வேண்டுமென மோசமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இருப்பினும் பெரும்பாலானவர்கள் இம்மாணவிக்கு எதிரான டிரோல்களை கண்டித்து வருகிறார்கள். பெண் என்றால் இப்படிதான் இருக்க வேண்டுமென யார் கட்டமைத்து வைத்தது என மாணவியை கேலி செய்யும் கூட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். சாதனை படைப்பவர்கள் கூட அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த கூட்டம் இன்னும் எத்தனை பேரின் திறமையை மழுங்கடிக்க போகிறது என்று தெரியவில்லை.
ஆனால் மாணவி பிராக்சி நிகம் அவர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை காதில் வாங்காமல் அவரின் லட்சியத்தை நோக்கி பயணித்து வருகிறார். அவருக்கு இன்ஜினியராக வேண்டும் என்பது விருப்பமாம். இதற்காக ஐஐடி-ஜேஈஈ நுழைவு தேர்வில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார். அவரின் கனவு நிறைவேண்டுமென பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.