பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு! சினிமாவை மிஞ்சிய அதிரடி காட்சிகள்!

0
138

சமீபகாலமாக மாணவர்களிடையே கல்வி கற்கும் திறன் மங்கி வருவதோடு ரவுடிசம் தலைதூக்கி வருகிறது.

குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, மாணவர்களை எந்த காரணத்தை கொண்டும் அடிக்கக் கூடாது, துன்புறுத்தக் கூடாது, என்று அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அரசு போட்ட இந்த உத்தரவை மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

சமீபகாலமாகவே அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அந்தந்த பள்ளி நிர்வாகம் மேல் இடங்களில் புகார் செய்து அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, வந்தவாசி சாலையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்த பள்ளியில் கடந்த 25ஆம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் ஒருவரை ஒருவர் திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சியை போன்று ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தன. இது தொடர்பாக தகவலறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சண்டையில் ஈடுபட்ட 2 மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளியில் விசாரணை நடத்தினார். அதன்பிறகு மாணவர்களிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு கண்டித்து அனுப்பி வைத்திருக்கிறார்.