உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

0
149

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இதன் காரணமாக, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து சீருடை மட்டுமே அணிந்து வரும்படி அறிவுறுத்தியது கல்லூரி நிர்வாகம்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனை கர்நாடக மாநிலம் முழுவதும் விவாதப்பொருளானது.

நிலைமையை உணர்ந்த கர்நாடக அரசு, மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்தே கல்லூரிக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதி மன்றம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அனைவரும் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வர இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து இதுதொடர்பான விரிவான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனக் கூறி அது தொடர்பான மனுக்களையும் தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் தேர்வு எழுத சென்ற இஸ்லாமிய மாணவிகள் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அறிந்து, தேர்வை புறக்கணித்து வெளியேறி உள்ளனர்.

இதுகுறித்து அந்த கல்லூரி முதல்வர் கூறுகையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் எங்களின் பேச்சை கேட்கவில்லை. ஹிஜாப் அணிந்து வருவோம் எனக் கூறி மொத்தம் 35 மாணவிகள் தேர்வை எழுதாமல் வெளியேறி சென்றதாக தெரிவித்துள்ளார்.