சப்-இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 3 பேர் மரணம்! மதுரை அருகே சோகம்!

0
129
Sub Inspector son Died in Accident

மதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 3 பேர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நெருங்கிய  நண்பர்களான பாரத  முத்து, அனிஷ், பாலாஜி, சூர்யா, மகேஷ், பாலா, பிரபு, மணிகண்டன். இவர்கள்  பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்து முடித்தவர்கள். தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதை தொடர்ந்து நண்பர்களுடன் சென்று நேரம் செலவழிக்க நினைத்து திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி,நேற்று காலை கல்லுப்பட்டி பகுதியிலிருந்து கார் ஒன்றை எடுத்துக்கொண்டு கேணி வனப்பகுதிக்குள் குளிப்பதற்காக சென்றனர். அங்கு ஆனந்தமாக இருந்துவிட்டு பின் காரில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்  பேரையூர் பகுதியை அடுத்த பழையூர் விளக்குப் பகுதியில் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து ஓடையில் விழுந்து நொறுங்கியது.

இதில் காருக்குள் இருந்த அனைவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தை கண்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஒரு புறம் மீட்பு பணியில் ஈடுபட,  மறுபுறம் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்,

காரில் இருந்த பாரத முத்து மற்றும் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்ததுடன், மீதம் படு காயங்களுடன் இருந்த ஆறு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில் அனிஷ் என்பவர் செல்லும் வழியிலேயே  பரிதாபமாக இறந்துவிட்டார்.

தற்போது காயமடைந்துள்ள பாலா, பிரபு, மணிகண்டன்,சூர்யா,மகேஷ்  ஆகியோர் முதலில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட,பின்  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து  காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் விபத்தில் உயிரிழந்த அனிஷ் என்பவர் பேரையூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வரும் மாரிமுத்து என்கின்ற காவல்துறை அதிகாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் படுகாயம் அடைந்த மணிகண்டன் என்பவரும் சப் இன்ஸ்பெக்டரின் மகன் என்பதும் தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.