புறநகர் ரயில்களில் இனி இவர்களும் பயணிக்கலாம்…! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
109

சென்னை புறநகர் ரயில்களில் தனியார், ஊடக ஊழியர்களும் செல்ல தெற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் புறநகர் ரயில்களில் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே வாரியம் சென்னை புறநகர் ரயில்களில் தனியார் மற்றும் ஊடக ஊழியர்களும் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி,

  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்.
  • அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
  • அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள்.
  • தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்.
  • சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்.
  • குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்.
  • அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.
  • பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான அங்கீகார கடிதத்தையும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின்போது காட்டவேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.