கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!
நாடு முழுவதிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில்,
தென்கிழக்கு ஆசியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. எனவே, இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த 16-ந் தேதி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், மாநிலங்கள் மரபணு வரிசை முறை சோதனை, தீவிர கண்காணிப்பு மற்றும் ஒட்டுமொத்த விழிப்புணர்வில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே, புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்களை உடனடியாக கண்டறிய போதுமான எண்ணிக்கையில் மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், சமூக நடவடிக்கைகளை தொடங்கும்போது எச்சரிக்கை குறிப்புகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். கொரோனா தொற்றின் பரவலை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு தகுதி உடைய அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.