சமீபத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார், இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருடைய இந்த கருத்திற்கு உடனடியாக அதிமுக தரப்பிலிருந்து சூடான பதில்கள் வந்த வண்ணமிருந்தன இந்த நிலையில், சசிகலா தொடர்பாக ஓபிஎஸ் தெரிவித்தது சரியான முடிவுதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இது நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகிறார், ஆனாலும் இதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இதனை அடுத்து தான் சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார், இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த சூழ்நிலையில், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலமாக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் மகன் ராமநாதன் அவர்களுக்கும் கடந்த 16 ஆம் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருகே பூண்டி புஷ்பம் கல்லூரியில் நேற்றைய தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சசிகலா உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர் என சொல்லப்படுகிறது. பூண்டியில் நேற்று நடந்த திருமண வரவேற்பு விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் பங்கேற்றார்கள்.
இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் சகோதரர் ராஜா வரவேற்பு விழாவில் பங்கேற்று கொண்டு டிடிவி தினகரனை சந்தித்து உரையாற்றி இருக்கிறார் கடந்த இரு தினங்களாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து நடைபெற்றுவரும் விவாதங்களுக்கு இடையில் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் அதிமுகவினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மத்தியிலும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.