திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0
137

தென்பெண்ணை ஆற்றில் திடீரென திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருகால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த் துறை சார்பாக விடப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் பெங்களூர் பகுதியில் கழிவுநீர் சேர்ந்து அதிக அளவில் நீர் வெளியேறுவதால் ,ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு 1120 கன அடி தண்ணீர் நுரையுடன் வந்து கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து சுமார் 1208 கனஅடி தண்ணீரை தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படுவதால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோர பகுதிகளில் உள்ள முக்தாலி , சின்ன கொள்ளு பெரிய கொள்ளு மற்றும் ஆழியாளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை தண்டோரா மூலம் விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவும், அக்கரைக்கு செல்லவோ கூடாது என வருவாய் துறையினர் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.