இந்தியா சீனா எல்லை பகுதியில் திடீர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய ராணுவம்!

0
145

நாட்டின் முப்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு தலைநகர் புதுடெல்லியில் கடந்த 7ம் தேதி ஆரம்பமானது. அந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள் படைப்பிரிவு தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்றைய நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கின்ற எல்லையில் நம்முடைய அண்டை நாடான சீனா தொடர்ந்து விஷமத்தனத்தை செய்து வருகிறது. இந்த நிலையில், நம்முடைய படைகள் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் மீது நம்முடைய நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். ராணுவத்தினர் மீதும், ராணுவ தளபதிகள் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்று அவர் பேசி உள்ளார்.

இதற்கு நடுவே நம்முடைய அண்டை நாடான சீனாவின் தலைநகர் பிஜிங்கில் அந்த நாட்டின் கூட்டு ராணுவ தலைமையகமான மத்திய ராணுவ ஆணையகம் இருக்கிறது. இங்கே நேற்று நேரில் சென்று பார்வையிட்ட சீனா அதிபர் ஜின்பின் நாட்டின் இறையாண்மை, மேம்பாடு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ வீரர்களிடையே பேசினார் என்றும் சொல்லப்படுகிறது.

இருநாட்டு தலைவர்களும் தங்களுடைய ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பித்திருப்பது எல்லை பகுதியில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

குவாட் என்று சொல்லப்படும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக மலபார் என்ற பெயரில் கூட்டு கடற்படை பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த வருடத்திற்கான 10 நாள் பயிற்சி நேற்று ஜப்பான் கடல் பகுதியில் ஆரம்பமாகிய நிலையில், சீன அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.