மோசடி வழக்கு விசாரணைக்காக திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொரோனா தாக்கத்தால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே .இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் “மகாமுனி” என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட நீதிமணி என்பதற்கு உரிமை வழங்கப்பட்டது.
இதற்காக அவர் வழங்க வேண்டிய தொகை ரூ.3.95 கொடியை மனுதாரருக்கு வழங்கவில்லை. இந்த நேரத்தில் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் நீதிமணி மீது பதிவான ரூ.3 கோடி மோசடி வழக்கில் மனுதாரரை நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு மனுதாரரிடம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ். கார்த்திகேயன் மனுதாரரை விசாரணைக்காக நேரில் ஆஜராக குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 41 (ஏ) வின் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும் ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக பதிவான வழக்கு என்பதால் காணொலி காட்சி மூலம் விசாரித்தால் சரியாக இருக்காது என வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதி. இது பெரும் தொகை மோசடி தொடர்பாக பதிவான வழக்கு. எனவே காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட முடியாது. மனுதாரர் முறையாக விண்ணப்பித்து இணையதள அனுமதி சீட்டு பெற்று வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன் ஆஜராக வேண்டும். ஒருவேளை மனுதாரர் ஆஜராகாத பட்சத்தில் அவருக்கு எதிரான சட்டப்படியாக நடவடிக்கையை துணை கண்காணிப்பாளர் எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.