இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கில் இலவசங்கள் வழங்குவதும் நன்மை, தீமை, தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்தது.
அதாவது மத்திய, மாநில, அரசுகள் அனைத்து அரசியல் கட்சிகள் நிதி ஆணையம் நிதி ஆயோக், தேர்தல் ஆணையம், உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெறலாம் எனவும், தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தது. ஆனால் பிரமாண பத்திரம் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், செய்தித்தாளில் படித்து தெரிந்து கொண்டதாகவும், தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
அந்தப் பிரமாண பத்திரத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக அரசியல் சாசன அமைப்பு என்பதால் நிபுணர் குழுவில் பங்கேற்க விரும்பவில்லை என்றும், தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் கருத்துக்கள் தேர்தலில் பாதிப்பை உண்டாக்கலாம் எனவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலவச திட்டங்களால் செலவினும் அதிகமாக உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், விவசாயம் போன்ற துறைகளில் ஏழைகளுக்கு இலவச சலுகை கட்டாயம் தேவைப்படுகிறது என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதம் செய்தார்.
இதனை தொடர்ந்து நிதி செலவு நலத்திட்டங்கள் உள்ளிட்ட இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அமைக்கவிருக்கின்ற நிபுணர் குழு அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யலாம் என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், இலவசங்களை தடுக்க சட்டம் இயற்றவும், உத்தரவிட இயலாது என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வருகின்ற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் வளர்ச்சியடைவதில் இலவசங்களால் தடை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். ஆனால் அவருடைய கருத்துக்கு நேரேதிராக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.