ஜனவரி மாதத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

0
102

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில், இந்த தேர்வை நடத்த தேர்தல் ஆணையம் சார்பாக சுமார் ஆறு மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்றம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.

இதற்கிடையில், தமிழக தேர்தல் ஆணையம் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 7 மாத கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த சமயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எல்லாம் சரியான சமயத்தில் நடத்த முடிகிறது, ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்று தலைமை நீதிபதி மிகக் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். தலைமை நீதிபதியின் கோபத்தை பார்த்த தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஏழு மாத கால அவகாசம் வேண்டாம் நான்கு மாத கால அவகாசம் போதும் என தெரிவித்தது, இது தொடர்பாக புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தார் தலைமை நீதிபதி.

அந்த விதத்தில் மறுபடியும் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது அந்த சமயத்தில் தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க அரசுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை எனக் கூறினார்.

தாங்களே மிக விரைவில் நடத்த வேண்டும் என்று இதற்கு முன்னால் தெரிவித்தீர்கள் இப்பொழுது நீங்களே அவகாசம் வழங்கலாம் என்று கூறுகிறீர்கள் என்று கண்டித்த தலைமை நீதிபதி தமிழக தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2022ஆம் ஆண்டு வரையில் அவகாசம் கேட்டு இருந்தது, மழைக்காலம் நோய்த்தொற்று தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி வார்டு சீரமைப்பு இட ஒதுக்கீடு செய்ய வேண்டியவை போன்ற காரணங்களை முன்வைத்து தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது என குறிப்பிட்டார்.

இருந்தாலும் இவற்றையெல்லாம் உரிய காரணங்களோடு நிரூபிக்கவில்லை ஆகவே நான்கு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கின்றோம் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகி உள்ளது.