Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

நவீன யுகத்தில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று கூறலாம். மண்ணில் செய்யும் விவசாயம் முதல் விண்ணில் செலுத்தும் ராக்கெட் வரை தனது அசாத்திய திறமையின் மூலம் பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் தன் வயதை ஒரு காரணமாக நினைக்காமல் கடுமையான உழைப்பின் மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஒரு பெண்மணி சாதித்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுதா ஜெகதீஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனமான ஸ்விக்கியில் வேலைக்கு சேர முயன்றுள்ளார். வயது சற்று அதிகம் என்பதால் ஆரம்பத்தில் தயக்கத்துடன் வேலை கிடைக்குமா என்று சந்தேகத்துடன் சென்றவருக்கு, வேலைக்கு தேர்வு செய்யும் நேர்காணலில் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இதையடுத்து வேலை கிடைத்த மகிழ்ச்சியில் படு ஜோராக செயல்பட்டுள்ளார். பணியின் ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை 6838 ஆர்டர்களை வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளார். அவரின் மன தைரியம் அவரை இந்தளவிற்கு பயணிக்க வைத்துள்ளது. ஆண்கள் செய்யக்கூடிய வேலையில் சாதித்து காட்டிய சுதாவை பார்த்து இப்போது ஆண்களும் பெருமைப்படுவதாக கூறுகிறார்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சுதாவிற்கு 2015 ஆம் ஆண்டு நடந்த விபத்தால் கட்டாய ஓய்வு எடுக்கும் நிலை ஆகிவிட்டது.

சில வருடங்களை கடந்து ஸ்விக்கியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் கூறினார்; மழை நேரத்தில் எனக்கான ஆர்டர் ஒன்று வந்தது, ஆர்டரை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு டெலிவரி செய்தேன். டெலிவரிக்கு பிறகு கொட்டும் மழையால் முழுவதும் நனைந்து வெளியே குளிரில் நடுங்கினேன். நான் வெளியே நடுங்குவதை பார்த்து வீட்டில் இருந்த வெளியே வந்த பெண்மணி, தண்ணீரை துடைத்துக்கொள்ள டவலை கொடுத்துவிட்டு, குடிக்க டீ வேண்டுமா என்று கேட்டார். அந்த நாளை என்னால் மகிழ்ச்சியாகவும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது.

ஒவ்வொரு டெலிவரியும் எனக்கு புதுப்புது அனுபவங்களை தருகிறது என்று புன்னகையுடன் சுதா கூறுகிறார். தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்கும் சிங்கப்பெண் சுதாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Exit mobile version