உலக அளவில் தற்போது பெண்களுக்கு இரண்டு வகையான கேன்சர்கள் உருவாகி வருகிறது 1. மார்பகப் புற்றுநோய் 2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய். முந்தைய காலங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு இந்த இரண்டாவது வகையான கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய புற்று நோய் தான் அதிக அளவில் இருந்து வந்தது. ஆனால் தற்போது சில ஆண்டு காலமாக மார்பக புற்று நோயே பெருமளவில் அதிகரித்து வருகிறது.
கர்ப்பப்பை வாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஆனால் மார்பகப் புற்றுநோய் என்பதே தற்போது அதிகரித்தும் வருகிறது அதே சமயம் உயிரை பறிக்கும் அளவிற்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
தற்போதைய பெண்கள் மார்பகத்தில் ஏதேனும் வலி ஏற்பட்டால், சமூக வலைதளங்களில் அதற்கான விடையைத் தேடி புற்றுநோய் இல்லாமல் இருந்தாலும் கூட ஒருவேளை நமக்கு இருக்குமோ என்று பயந்து வாழ்கின்றனர். எனவேதான் மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகளை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக கேன்சர் நமது உடம்பில் இருக்கிறது என்றால் அதற்கான அறிகுறியை ஆரம்பத்தில் காட்டாது. அதேபோல் எந்த வலியும் இருக்காது. ஆனால் நமக்குத் தெரிய வரும் பொழுது அந்த கேன்சர் ஆனது நமது உடலில் அனைத்து பாகங்களிலும் பரவி இருக்கும். இதனால்தான் புற்று நோய் பாதித்தவர்களின் உயிரை காப்பாற்றுவது என்பது கடினமாகிவிடுகிறது.
ஆனால் மார்பகப் புற்றுநோய் வருகிறது என்றால் ஆரம்பத்திலேயே அதன் கட்டிகள் நமது மார்பகத்தில் இருப்பது தெரியவரும். கைகளை வைத்து பார்க்கும் பொழுது மார்பகத்தில் ஏதேனும் கட்டிகள் இருப்பது போல் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பார்க்க வேண்டும்.
ஒரு சிலருக்கு மார்பகத்தில் வலியோ அல்லது மார்பக காம்புகளில் ரத்தம், தண்ணீர், பால் போன்று ஏதேனும் கசிந்தாலோ மார்பக புற்றுநோய் உள்ளதாக அர்த்தம். அதிலும் ஒரு சிலருக்கு அந்த மார்பக கட்டிகள் பரவி உடலின் மற்ற பாகங்களிலும் தோன்ற ஆரம்பித்து விடும். இதனால் அந்த கட்டியானது எந்த பாகத்தில் தோன்ற ஆரம்பித்து உள்ளதோ அந்த பாகத்திலும் வலி ஏற்படக்கூடும்.
ஆரஞ்சு பழம் தோலின் மேல் இருப்பது போல் மார்பகத்தின் மேலும் புள்ளி புள்ளியாக இருந்தாலும் அதுவும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.
அவ்வாறு கட்டிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளை அந்த கட்டி நீர் கட்டிகளாக கூட இருக்கலாம்.
இந்த நோயானது பரம்பரை வழியின் காரணமாகவோ அல்லது குடும்பத்தில் முதல்வராகவோ இந்த நோயானது ஏற்படலாம். அவ்வாறு புற்றுநோய் கட்டிகள் இருந்தாலும் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் தற்போது மருத்துவத் துறை வளர்ச்சி அடைந்து உள்ளது. முன்பு போல மார்பகத்தையே அகற்ற வேண்டும் என்று இல்லை, கட்டிகள் எங்கு உள்ளதோ அந்த கட்டிகளை மட்டுமோ அல்லது அந்த பகுதியை மட்டுமோ அகற்றி இந்த நோயை குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே பெண்கள் அவ்வபோது மார்பகத்தில் ஏதேனும் கட்டிகளோ அல்லது வலிகளோ இருக்கிறதா என்று ஆராய்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் ஆரம்பத்திலேயே அதனை சரி செய்து கொள்ளலாம்.