அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

0
156
Take action to catch the squirrel! Petition filed by BJP!

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி பொறுப்பேற்றதும், பல இடங்களில் மின்வெட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை மற்றும் அணில்கள் போன்ற சிறு விலங்குகளால் தான் என்று கூறி இருந்தார். இதுபற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம்  அணில் தான் என்றும் மின் வழித் தடங்களில் செடிகள் உயரமாக வளர்ந்து கம்பியோடு மோதும் பொழுதும், மரக்கிளைகளில் அணில் வந்து ஓடும் போதும், பிறகு அந்த மின் கம்பி இரண்டும் ஒன்றோடு ஒன்றாக, ஒட்டிக் கொள்ளும் பொழுது இது போன்ற காரணங்களால் மின்தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அவருடைய அந்த பதிலுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் முதல் பாமக தலைவர் ராமதாஸ் வரை அனைவரும் பல வித கிண்டல்களும், பல தரப்பட்ட கேள்விகளும், பதில்களும் சொல்லி வந்தனர்.

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் கேள்விக்கான பதில்களை தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கங்களை அளித்துள்ளார். அதில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், மரக்கிளைகள் வெட்டப்படவில்லை.

அவைகள் மின் கம்பிகளின் மேல் உரசுகின்றன. அணில்கள் உள்ளிட்ட சில பல உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன எனவே தான் இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை.

அதே போல் அணில்கள் மட்டுமே காரணம் எனவும் நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடமும் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் எனவும் சொல்லி உள்ளார்.

மேலும் அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் பல சவால்களாகும் என்பதையும் தேடிப் படித்திருக்கலாம்..! பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த ஒரு சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒன்றும்  பெரிதில்லை திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலமாக உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்சார வயர்கள் நிலத்துக்கடியிலேயே செல்கின்றன. அனைத்து இடங்களிலும் மரங்கள் வெட்டாததை மின்துறை அமைச்சர் கூறி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதன் காரணமாகவே அனைத்து கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் அனைவரும் அந்த மாதிரி கேள்வி வினாக்களை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த காஞ்சிபுரம் மேற்கு நகரத் தலைவர் ப. குமார் தொடர் மின்தடை காரணமாக அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் அதில் அவர் தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் அணில் தான் என்று தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறி இருக்கிறார்.

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படும் மின் வெட்டுக்கு காரணம் அணிலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது ஆகையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றித்திரியும் அணில்களை பிடித்து காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் தொடர் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.