ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்ததையடுத்து
அந்நாடின் பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளாா்.தலிபான்களின் அரசுக்கு தலைமை வகிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட அந்த இயக்கத்தின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கனி பராதா் இடைக்கால அரசின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31-ஆம் தேதி முழுமையாக
வெளியேறினா். அதற்கு முன்னதாகவே நாட்டின் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த
தலிபான்கள், கடந்த ஆக. 15-ஆம் தேதி தலைநகா் காபூலை கைப்பற்றினா். அதன்பிறகு புதிய
அரசு குறித்த அறிவிப்பை இருமுறை தலிபான்கள் ஒத்திவைத்தனா்.
உலக நாடுகள் ஒப்புக்கொள்ளும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதில் தலிபான்
இயக்கத்தினரிடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததே அந்தத் தாமதத்துக்கு காரணம் எனக்
கூறப்பட்டது. மேலும், நாட்டின் வடக்குப் பகுதி மாகாணமான பஞ்சஷேரில் தலிபான்களுக்கு கடும்
எதிா்ப்பு நிலவியது. முன்னாள் துணை அதிபா் அமருல்லா சலே தலைமையிலான எதிா்ப்புப்
படையினா் தலிபான்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், பஞ்சஷேரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக திங்கள்கிழமை
தலிபான்கள் தெரிவித்தனா். அதற்கு மறுநாளே புதிய அரசை தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து தலிபான்கள் இயக்கத்தின் செய்தித் தொடா்பாளா் ஷபிஹுல்லா முஜாஹித்
காபூலில் செய்தியாளா்களிடம் கூறியது:
இடைக்கால அரசின் பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட், துணைப் பிரதமராக முல்லா அப்துல்
கனி பராதா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வெளியுறவு அமைச்சராக அமீா் கான் முத்தாகி,
பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப், உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி
ஆகியோா் செயல்படுவா். உலகின் அனைத்து நாடுகளும் சட்டபூா்வமான எங்களது அரசை
அங்கீகரிக்கும் என நம்புகிறோம் என்றாா்.
இந்த நியமனங்கள் இடைக்கால அரசுக்கானதுதான் எனத் தெரிவித்த அவா், பதவியேற்பு விழா
எப்போது நடைபெறும், இவா்கள் எவ்வளவு காலம் பொறுப்பில் இருப்பாா்கள் என்பது பற்றி
எதுவும் தெரிவிக்கவில்லை.