ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று தஞ்சாவூர் வந்தார். அவர் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்ய ரூபாய் 6 கோடியே 86 லட்சம் செலவில் அமைக்க தற்போது திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடவும், மின்விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்த நிலையில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதை அமைச்சர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்டில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடன் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா , பயிற்சி கலெக்டர் கௌசிக், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி ராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட தடகள கழக தலைவர். கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் உடனிருந்தனர். அதன் பின் நிருபர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 11 வீரர்கள் தேர்வாகி இருப்பது வரலாற்று சாதனை ஆகும்.
போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த தொகை விரைவில் வழங்கப்படும். 11 வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஒடுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.