மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு!
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பெற்றார். இதில் மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செல்போன்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பான 359 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்தனர். மேலும் மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 500 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 5 பேருக்கு முதலமச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்களையும் அவர்களுக்கு வழங்கினார்.
இதை தொடர்ந்து அம்மாவட்ட கலெக்டா் ஸ்ரீதர் கூறுகையில், தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வரும் எனவும் கூறினார்.
மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கென தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் இத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி,r உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரத்தினமாலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டும் நிகழ்ச்சியை ஊக்குவித்தனர்.