நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தின் போது சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கும். அந்த நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிப்பார்கள்.
இந்த சூழ்நிலையில், சென்ற இரு வருடங்களாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் தற்சமயம் இந்த சுதந்திர தின விழாவின்போது நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக சென்னை மெரினாவில் நடைபெறுகின்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நேரில் கண்டுகளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த சுதந்திர தின விழாவிற்கு வருகை தருவோர் அனைவரும் நிச்சயமாக முக கவசம் அணிய வேண்டும் எனவும், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் எனவும், தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த வருடம் சுதந்திர தின விழாவின் கொண்டாட்டத்தில் எல்லா கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடிமக்கள் எல்லோரும் அவரவர் இல்லங்களில் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.