Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளுநரின் அலட்சியத்தையும் காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

Anbumani Ramadoss

ஆளுநரின் அலட்சியத்தையும் காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, ”கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆள்கொல்லியாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ளனர்.

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது. இது குறித்து அமைச்சரே நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாட்களாகின்றன. ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்துகிறது.

ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version