தொடங்கியது தமிழக அரசின் தொழில்நெறி விழிப்புணர்வு! தேனி மக்களே வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்!
தமிழக அரசின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் சூலை மாதம் இரண்டாவது
வாரத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் 15.07.2022
அன்று திறன் தினம் அனுசரித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதற்கிணங்க தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தை கொண்டாடவுள்ளது.
11.07.2022 அன்று மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலும், 12.07.2022 அன்று மகளிர்க்கான தொழில்நெறி வழிகாட்டலில், பெண் கல்வி, பெண் முன்னேற்றம் குறித்தும் உயர்கல்வி, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்டுதலும் 13.07.2022 அன்று சமூக நலத்துறையுடன் இணைந்து, மூன்றாம் பாலினத்தவருக்கான தொழில்நெறி வழிகாட்டலும், 14.07.2022 அன்று மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்துடன் இணைந்து,முன்னதாக தொழில் திறன் அறிந்திருந்தும் உரிய சான்றுகள் ஏதும் இல்லாதோரை கண்டறிந்து அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து சான்றிதழ் பெற நடவடிக்கை மேற்கொள்ளுதல் நிகழ்ச்சியும், 15.07.2022 அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் வேலைதேடும் இளைஞர்கள், பெண்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் .க.வீ. முரளிதரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.