நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக தமிழகத்திற்கு ₹2,152 கோடி நிதி வழங்கப்படாமல் இருப்பது மாணவர்களை பாதிக்கக்கூடியது எனக் குறிப்பிட்டார். மேலும், “மாநிலங்கள் எந்த ஒரு கொள்கையையும் நிராகரித்தால், அதற்காக மத்திய அரசு நிதியை மறுக்கலாமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
மத்திய அரசின் பதில்
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மார்ச் மாதம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. தமிழக அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன,” என தெரிவித்தார்.
மேலும், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் உட்பட தமிழக எம்.பி.க்கள் என்னை சந்தித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர் என்று தெரிவித்தார்.
பாஜக ஆளும் மாநிலங்களும், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. “இந்தக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு நடைபெறுகிறது என கூறுவது தவறான குற்றச்சாட்டு,” என்று அமைச்சர் விளக்கினார்.
மேலும், “தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல், மொழி பிரச்சினையை தூண்டுவதற்காக அரசியல் செய்யப்படுகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் முதலில் இணைவதாகக் கூறிவிட்டு, பிறகு யூ-டர்ன் எடுத்தது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டதாகவும், பின்னர் திடீரென அதை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
மத்திய கல்வி அமைச்சரின் இந்தக் கருத்துக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிதியை தராமல் ஏமாற்றும் நீங்கள், எங்கள் எம்.பி.க்களை ‘அநாகரிகமானவர்கள்’ என குறிப்பிடுவதே தவறானது. தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதை பிரதமர் மோடி ஏற்கிறாரா?மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரித்துவிட்டது என்பதை மறக்க முடியாது! என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை! நாங்கள் உங்கள் திட்டங்களை ஏற்க மாட்டோம், ஏற்கவும் முடியாது. தமிழ்நாட்டிற்கு வந்துள்ள நிதியை வழங்குவது உங்கள் கடமை!” என்று அவர் வலியுறுத்தினார்.