தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி, பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேநேரத்தில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அது எழுப்பும் ஒலியினால் சிறுவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை மக்கள் தவிர்க்க வேண்டும். குறைந்த ஒலி, குறைந்த மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும். தீபாவளியன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும், இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை:
- பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
- மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயலலாம்.
பொதுமக்கள் தவிர்க்க வேண்டியவை:
- அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்கலாம்.
- மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.