காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை
கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வாங்கிதர வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் விடியா திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் விடியா திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.