பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!!

0
141

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!!

தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் இன்றியமையாதது முல்லைப் பெரியாறு அணை.

இந்நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுபணித்துறை அதிகாரிகள் குமளி வழியாக தேக்கடிக்கு கொண்டு சென்றனர். அப்போது, கேரள வனத்துறை அதிகாரிகள் தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தரவில்லை.

இதனால் தமிழக பொதுபணித்துறை அதிகாரிகள், “தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக பொதுபணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு இந்த தகவலை தெரிவித்தனர்.” இதையறிந்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கேரள அரசின் இந்த செயலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக பொதுபணித்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய மூவர் குழு உத்தரவின் பேரில் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக தமிழக கட்டுமான தொழிலாளர்கள் சிலர் அணைப்பகுதிக்கு செல்ல முயன்றனர். அப்போது தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை சோதனை சாவடி ஊழியர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.

வழக்கமாக நடைபெறும் பணிக்காகத்தான் செல்கிறோம் என்று தமிழக ஊழியர்கள் எடுத்துக்கூறியும் அதனை ஏற்க மறுத்த கேரள வனத்துறையினர், இனிமேல் மராமத்துப் பணிக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாக இருந்தால் முன்னதாகவே கடிதம் தரவேண்டும். அந்த கடிதத்திற்கு கேரள நீர்வளத்துறையினர் மற்றும் போலீசார் அனுமதி கொடுத்த பின்னரே செல்ல முடியும் என்று தெரிவித்தனர்.

இதனால் பணிக்கு சென்றவர்கள் அணைபகுதிக்கு செல்லாமல் திரும்பி வந்தனர். கேரள அதிகாரிகள் தொடர்ந்து மராமத்து பணிகளில் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.