Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி

ரஜினிக்கு பிறகு எனக்கு தான் அந்த பெயர் பொருத்தமாக இருந்தது! தமிழிசை பேட்டி

16 வயதினிலே படத்திலே நடித்த நடிகர் ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்தது நான் தான் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த, மருத்துவத் துறையைச் சார்ந்த தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவரான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களிலும், 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக  சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.பின்பு அதிமுகவின் கூட்டணியோடு 2019 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் திமுக கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டு மீண்டும் தோல்வி அடைந்தார்.

பலமுறை பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று முதன் முதலாக பாஜகவுக்கு ஆதரவாக தாமரை மலர பல்வேறு விமர்சனங்களை வாங்கி கொண்டார்.இதன் காரணமாக பாஜகவின் தலைவராக இருந்தபோது இணையத்தில் அனைவராலும் கிண்டலடிக்க பட்டார்.

முக்கியமாக திமுகவினரால் நடத்தப்படும் இணையதள பக்கங்களில் இவரை கடுமையாக விமர்சித்து வந்தார்கள். அதாவது இவருடைய முடியின் வடிவமைப்பை பார்த்து இவரை பரட்டை என்றும், இவர் நிறம் மற்றும் உடல் அமைப்பைப் பார்த்தும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அரசியலில் ஒரு பெண்ணாக இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பயணம் செய்து வந்தார்.

இதனாலோ என்னவோ பாஜக அரசானது இவருக்கு தெலுங்கானா ஆளுநர் என மிகப்பெரிய பதவியை செப்டம்பர் 1 2019 ஆம் ஆண்டு வழங்கியது. ஒரு தமிழராக ஆளுநர் பொறுப்பை ஏற்று தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்த்தார்.தற்போது சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கும் போது, தமிழகத்தில் 16 வயதினிலே ரஜினிக்குப் பிறகு பரட்டை என பெயர் எடுத்தது நான் தான், பரட்டைத் தலை, கருப்பு என பல விமர்சனங்களை எதிர் கொண்டேன்.

மேலும் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் கூறிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் எனக்கு சுருட்டை முடி தான் ஆனால் நான் யார் பணத்தையும் சுருட்டியது இல்லை. நான் கருப்பு தான் ஆனால் என் கைகளில் கருப்பு பணம் இல்லை என்று ரைமிங்காக பேசியுள்ளார். ஆளுநராக பதவி ஏற்ற பின்னரும் தன்னை விமர்சித்தவர்களை மறக்காமல் அவர்களுக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்ததை அனைவரும் வரவேற்று வருகின்றனர்.

Exit mobile version