ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது தமிழக கல்வித துறை. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைத்தது தமிழக அரசு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழ்நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது அரசு.
10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் குறித்த மாறுபட்ட செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. 10ம் வகுப்புக்கும் தேர்வு வைக்காமல் திருப்புதல் தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை அறிவிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படை கல்வித் தகுதியாக கருதப்படுவதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியவர் “ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும்.
கடந்த மார்ச் 26-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 1 வகுப்புத் தேர்வை எழுதாத மாணவர்கள், ஜூன் 2-ம் தேதி அத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, ஜூன் 4-ம் தேதி நடைபெறும்.
மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை 34 ஆயிரத்து 842 பேர் வாகனங்கள் குறைவால் எழுத முடியவில்லை என்ற செய்தி வெளியானது. அவர்கள் மீண்டும் ஜூன் 4 ஆம் தேதி அத்தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது.
வரும் 27-ம் தேதியிலிருந்து 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவிதமான சுகாதார வசதிகளும் செய்து தரப்படும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் தேர்வுகளின்போது எடுக்கப்படும்.
பள்ளி திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியம் என்பதால் நடத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.