Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா?

மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் படு தோல்வியை அடைந்துள்ளது.இதனையடுத்து நடைபெற உள்ளசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், தோல்விக்கான காரணங்களை ஆராயும் விதமாகவும் ஒவ்வொரு கட்சியும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் அந்த புதிய தலைவர் என்பது தான் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விவாதமாக மாறியிருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் அவர் வகித்த அந்த பதவிக்கு தமிழிசை சௌந்தராஜன் நியமிக்கப்பட்டார். பொன்.ராதாகிருஷ்ணன் வகித்த அந்தப் பதவி காலத்தின் மீதமிருக்கும் நாட்களையும் நிறைவு செய்த தமிழிசை சௌந்தராஜன் மேலும் இரண்டாவது முறையாகவும் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜன் வகித்து வரும் பதவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிற நிலையில் அடுத்த தலைவரை யாரை நியமிக்கலாம் என பாஜக தலைமை ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையில் அடுத்த தமிழக பிஜேபி தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் போன்றவர்களின் பெயர்கள் தற்போது ஆலோசனையில் உள்ளதாக கூறுகின்றனர். கருப்பு முருகானந்தம், பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அவரை தலைவர் ஆக்குவதற்கும் பொன்னாரை தலைவர் ஆக்குவதற்கும் ஒன்று தான் என நினைக்கிறதாம் பிஜேபி தலைமை.

இந்த மாதிரி குழப்பங்களால் தலைவர் பதவிக்கான பட்டியலில் அடுத்து இடம்பிடித்துள்ளவர் நயினார் நாகேந்திரன். இவர் அதிமுகவிலிருந்து ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுவரை தமிழக பிஜேபி தலைமையில் தொடர்ந்து நாடார் சமூகத்தினர் முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், அடுத்து முக்குலத்தோர் சமூகத்தினரை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக தலைமை. மேலும் அதிமுகவில் நீண்ட அரசியல் கள அனுபவம் உள்ளவர், பண பலம் உள்ளவர் என்ற அடிப்படையிலும் நயினார் நாகேந்திரன் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் உள்ளார்.
நயினார் நாகேந்திரன் இப்போதுதான் வந்தவர் அதனால் அவருக்கு பாஜக மாநில தலைவர் பதவி கொடுக்கலாமா? என்றும் சில எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.

தொடர்ந்து நாடார் சமூகத்தினரே தமிழக பாஜக தலைமை பதவி வகித்ததால் கட்சியுள்ளயே நாடார் சாதி அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக உட்கட்சி பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் இந்த முறை மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத படுகிறது. அதில் முக்குலத்தோருக்கு வாய்ப்பு கிடைக்குமா? வன்னியர் சமுதயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த தமிழக பாஜக தலைமை மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே நடக்குமா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடக்குமா? என்பதும் கேள்வியாகவே உள்ளது.

Exit mobile version