தமிழகத்தில் 22651 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு! பலி குறையாததால் அதிர்ச்சி!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் 36 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி, தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து 15வது நாளாக படிப்படியாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், கோவையில் 2,810 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 1,971 பேரும், ஈரோட்டில் 1,619 பேரும், சேலத்தில் 1,187 பேரும், திருப்பூரில் 1,161 பேரும் தஞ்சையில் 1,004 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் ஆயிரத்திற்கு குறைவாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலேயே கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 33,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,68,968 ஆக உள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 463 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், சென்னையில் 71 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், கோவையில் 31 பேரும், திருவள்ளூரில் 29 பேரும், குமரி மற்றும் பெரம்பலூரில் 22 பேரும், திண்டுக்கல்லில் 21 பேரும், சேலத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். தருமபுரியைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
உயிரிழந்த 463 பேரில் 102 பேருக்கு கொரோனா தொற்றைத் தவிர வேறு எந்த இணை நோயும் (comorbidities) இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.