Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது!

தமிழகத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி சேவை! நாட்டிலேயே முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது!

தமிழக அரசு திங்கள்கிழமை முதல் மாநிலத்தின் அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.முதல் முகாம் சனிக்கிழமை சென்னையில் பொது சுகாதார இயக்குநரக வளாகத்தில் தொடங்கப்பட்டது.இங்கு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் 24 மணி நேர முகாமின் நோக்கம் மற்ற மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வதற்காக மற்றும் வேலைக்காகத் தடுப்பூசிகள் அவசரமாகத் தேவைப்படுவோருக்கு கிடைக்கச் செய்வதாகும்.

முகாம்களை நடத்த ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கான அட்டவணைகள் வழங்கப்படும்.சென்னையில் அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் இந்த முகாம் இருக்கும்.மேலும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் திங்கள்கிழமை முதல் இந்த சேவை முகாம் இயங்கும் என்றார்.

மாநிலத்தில் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க இந்த முகாம் உதவியாக இருக்கும் என்றும் மக்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் இங்கு வந்து பதிவு செய்து டோஸ் எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.முகாம்களைப் பற்றி உள்ளூரில் விளம்பரம் செய்யுமாறு நாங்கள் அதிகாரிகளைக் கேட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.தமிழ்நாட்டுக்கு அமெரிக்க அறக்கட்டளை 2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாநில சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

இது மாநிலத்தில் உள்ள 15 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தத் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என ஏற்கனவே தமிழக அரசு கூறியுள்ளது.நேற்று கொரோனாக் கட்டுப்பாடுகளில் மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version