Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தஞ்சையை பதறவைக்கும் ‘கொரோனா’! அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு பாசிட்டிவ்!

Tanjore

Tanjore

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 779 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தம் 8 லட்சத்து 73 ஆயிரத்து 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று உச்சபட்சமாக 664 பேருக்கு ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டது மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி  மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் விதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும், அடுத்தடுத்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இருதினங்களுக்கு முன்பு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த 185 மாணவர்கள், 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 18 பேர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட  205 பேர் கொரோனாவால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு முகாம்கள் அமைத்து மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனையில் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை கல்லூரியில் 20 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை வெளியான கொரோனா பரிசோதனை முடிவின் படி கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள், ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version