Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி!

tasmac

tasmac

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறை இருக்கும் என்பதால், பெரும்பாலும் 9 மணிக்கே அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, வேலைக்கு அல்லது வெளியே செல்பவர்கள் வீட்டுக்கு புறப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகள் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. இதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களும், கடைக்கு வரும் குடிமகன்களும், 10 மணிக்கு வீட்டுக்கு செல்வது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் எந்த கடைகளும் இயங்காது என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளடு. ஞாயிற்றுக் கிழமைகளில் மதுக்கடைகள் இயங்காது என்றும், மற்ற நாட்களில் 9 மணிக்கே கடைகள் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களும், குடிமகன்களும் இரவு 10 மணிக்கு முன்பாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை கடைகள் இயங்காது என்பதால், சனிக்கிழமையே வாங்கி வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில், மது விற்பனையை 8 மணிக்கே முடிக்க ஆணையிட வேண்டும் என்றும் அல்லது கடந்த ஆண்டைப் போன்று மதுக்கடைகளுக்கு முழு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வருவாயை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்யவும், வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு நிதி சுமையை ஏற்படுத்தாமல் இருக்கவும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் பலர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Exit mobile version