டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்

0
138

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகள் மூடியுள்ளதால் வழக்கமாக குடிக்கும் நபர்கள் பெரும்பாலும் அந்த குடிப்பழக்கத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த வாரம் ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முழுமையான மதுவிலக்கு கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும்,சமூக ஆர்வலர்களும் மதுக்கடையை மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், மதுக்கடைகளை திறந்த அடுத்த சில நாட்களில் இந்த நிபந்தனைகளை மீறியதால், தமிழகம் முழுவதும் 41 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் மூட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இது குறித்த பிரதான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதி மன்றம் இன்றைக்கு தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வராத நிலையில், மதுக்கடைகளை திறக்க தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர வருமானம் அல்ல என டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்டம் – ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இவ்வாறு டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில், மது பழக்கமும் ஒரு கொடிய நோய் என்றும் ஏழை – எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல் மது அருந்த அதிகமாக செலவழிப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மதுக்கடைகளை மூட வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்க டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் மதிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.

அதேசமயம், டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்றவுள்ளதாகவும்,மேலும் மதுபான விற்பனை தொடர்பான நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு அளித்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது என்றும் தமிழக அரசின் சார்பாக தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்க தயாராக இருப்பதாக ஹிப் பார் என்ற நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் தமிழக அரசுத்தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

டாஸ்மாக் பதில்மனுவில், 12 கடைகளில் மட்டும் தான் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 170 கோடி ரூபாய் எப்படி வசூல் எப்படி வந்தது என்பன உள்ளிட்ட கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். மேலும் முழுமையான மதுவிலக்கை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர்களும் அக்கோரிக்கையை எழுப்பவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.