தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான ஊழல் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணையில், தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், மதுபான உற்பத்தியாளர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை வழங்கிய எஸ்.என்.ஜே., கால்ஸ் போன்ற நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மதுபான விநியோக தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், டாஸ்மாக் தலைமையகத்தில் உள்ள விற்பனை மற்றும் வரவு செலவு தொடர்பான ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, கணிசமான வேறுபாடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத் தொடர்ந்து, டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்காக 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டதற்கான குறிப்புகளும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. மேலும், கலால் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் முக்கிய ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மதுபான ஆலைகளில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு நேரடி விற்பனை செய்யும் போது, ஒவ்வொரு பாட்டிலும் 30 ரூபாய் வரை கூடுதல் விலையாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருமானம் அதிகாரப்பூர்வமாக கணக்கில் பதிவு செய்யப்படாமல் தனிநபர்கள் வசம் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணையில், இந்த முடிவுக்கு ஆதாரமாகக் கூறப்படும் முக்கிய ‘டிஜிட்டல்’ ஆவணங்கள் மற்றும் சப்ளை ரெக்கார்டுகள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் கையில் உள்ளன.
முதற்கட்ட ஆய்வில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதும், இதனுடன் கலால் வரி ஏய்ப்பு, டெண்டர் முறைகேடு, கணக்கில் காட்டாமல் விற்கப்பட்ட மதுபானங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், இந்த ஊழல் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மாநில அரசின் எதிர்கால நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.