நீங்கள் மது பிரியரா? – அப்ப இந்த விதிகளை படிச்சுட்டு கடைக்கு போங்க
மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே உயர்நீதி மன்ற உத்தரவை காற்றில் விட்டதன் காரணமாகவே டாஸ்மாகை மூட நேரிட்டது. இதனால் இனி எச்சரிக்கையாக இருக்க முடிவெடுத்துள்ள அரசாங்கம் சமூக இடவெளி உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதி செய்ய டாஸ்மாக் ஊழியர்களிடம் உத்தரவிட்டுள்ளதாம்.
நாளை டாஸ்மாக் மறுபடி திறக்கப்படும் நிலையில் ஒரு மணி நேரத்திற்கு 70 பேர் வீதம் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே ஒரு கடையில் மதுபானம் விற்க அரசு முடிவெடுத்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக 7 நிறங்களில் டோக்கன் தயாரித்துள்ளது. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிறத்தில் டோக்கன் நேரம் குறிப்பிடப்பட்டு தரப்படுமாம்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மது குடிப்போர் ஆதார் கார்டு கொண்டுவர தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெவித்துள்ளது. அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒழுங்கு டிஜிபி திரிபாதி, மாநிலம் முழுவதும் உள்ள காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றித் தெரிவித்துள்ளார்.
கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்
- 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்கவேண்டும். மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு மறு நாளுக்கு வரவழைக்க வேண்டும்.
- உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமுக இடைவெளியைப் பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம். அதற்கான உரிய நடவடிக்கையை சரியான முறையில் எடுக்க வேண்டும்.
- டோக்கன் விநியோக முறை குறித்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் அந்தந்தப் பகுதி அதிகாரிகள் பேசி நடைமுறையைச் செய்துகொள்ளவேண்டும். டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்க வேண்டும்.
- டோக்கன் விநியோக கவுன்ட்டர்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தடுக்க அதிகமாக டோக்கன் விநியோக கவுன்ட்டர்கள் அதிகரிக்கச் செய்யவேண்டும். பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும். சமூக விலகலுடன் நிற்பதற்கு இடைவெளி விட்டு பெயிண்ட் மூலம் மார்க் செய்ய வேண்டும்.
விரைவில் அனைத்து மதுபானக்கடைகளில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த அரசுக்கு தான் மதுபிரியர்கள் மீது எவ்வளவு அக்கறை?