சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு

0
153

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டாலும் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். இதனால் மே 3ம் தேதிக்காகக் காத்திருந்தனர். கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் குடிமகன்கள். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து விடத் தமிழகத்தில் எப்போது மது கடைகள் திறக்கப்படும் என ஏக்கத்துடன் காத்திருந்த ‘குடி’மக்களுக்கு வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் எனத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.

இதற்க்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் மதுகடை திறப்பது ஆபத்தில் முடியும் என எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் கொரோனா அதிகமாக பரவி வரும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “சென்னை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைகள் 07.05.2020 அன்று திரக்கப்படமாட்டாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.