கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அஞ்சலட்டை மூலமாக கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை மகாலஷ்மி அவர்கள் பாடம் கற்பிக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும், ஆன்லைன் மூலம் பாடம் கற்பதற்கு ஸ்மார்ட்போன் வசதி இல்லாத கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் படிக்கும் பெரும்பாலோனோருக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் தமிழக அரசு பாடங்களைக் கற்பித்து வருகிறது. ஆனால், ஊரகப் பகுதிகளில் சில மாணவர்கள் வீட்டில் தொலைக்காட்சிகளும் இருப்பது இல்லை. தொலைக்காட்சிகள் இருந்தாலும் கேபிள்கள் இணைக்கப்படாத காரணத்தால் பாடங்களை சரிவர அறிய முடிவதில்லை. இந்தச் சூழ்நிலையில் அரசு கடந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விட்டது.
மேலும், நடப்பு கல்வியாண்டில் புத்தகங்கள் வழங்கப்பட்ட போதிலும் ஊரடங்கு நீடித்ததால் அதே சிக்கலே மீண்டும் தொடர்கிறது. இதனை போக்கும் வகையில் சில அரசு பள்ளி ஆசிரியர்கள் தாங்களாகவே முன்வந்து மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற பாடங்களை நடத்தி வருகின்றனர். அதனை அடுத்து கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அவர்கள், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களை கிராமத்தில் ஒரு பொதுவான இடத்திற்கு அழைத்து வந்து பாடங்களை நடத்துகின்றார்.
மேலும், பாடம் நடத்தி முடித்த உடன் அவர்களிடம் தனது வீட்டு முகவரி இட்ட 50 பைசா அஞ்சல் அட்டைகளை கொடுத்து அதில் மாணவர்களுக்கு சந்தேகத்தை எழுதி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார். மேலும், மாணவர்களின் இருப்பிட முகவரி, வீட்டு ஸ்மார்ட்போனில் தொலைபேசி எண்களையும் அவரே முன்வந்து பெற்றுக்கொள்கிறார். இதன்பிறகு மாணவர்கள் பயிலும் போது சந்தேகங்களைஅஞ்சலட்டை மூலமாக எழுதி அனுப்ப அதன் மூலம் பதில் அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களிடத்தில் எழுதும் திறனை குறைத்து வருகிறது தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலை இதன் காரணமாக அவர்களுடனான தொடர்பும் எங்களுக்கு குறைந்து விட்டது. மேலும், இதன் மூலமாக மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாத குறையை பூர்த்தியாகும் என்றும் அவர் கூறினார். அந்த பதிலை மாணவர்கள் ஆண்டு முழுவதும் வைத்து பாதுகாத்து, தேர்வு நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்று அவர் விளக்கினார். மேலும் இந்த நடவடிக்கையால் கடிதம் எழுதும் திறனும் மேம்படும் என்றார் ஆசிரியை மகாலட்சுமி.