கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பு… பின் நேர்ந்த பரிதாபம்!

0
144

ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களிலேயே நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் மாநிலத்தில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் நவ. 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முதலமைச்சரின் அறிவிப்பின்படி கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சித்தூரில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அம்மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் திறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.