சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு!
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து வீசிய வெடிகுண்டு உடனே பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த பாலத்தின் அருகே வியாபார நிறுவனங்களும், பூங்காவும், ஓட்டல்களும் பல்வேறு அலுவலக கட்டிடங்களும் உள்ளன.
ஜெமினி பாலத்தின் கீழ் அல்லது மேல் பகுதியில் எப்போதும் போக்குவரத்து காவல்துறையினர் எப்போதும் இருப்பார்கள். இந்த பாலம் தி.நகரில் இருந்து மவுண்ட் ரோடு வழியாக சென்று மெரினா கடற்கரை, பாரிஸ், சென்னை நீதிமன்றத்திற்கு செல்வதற்கான முக்கியமான வழியாகும். அதுமட்டுமல்லாமல் எப்போதுமே போக்குவரத்து அதிகம் இருக்கும் பாலமாகும்.
இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மேல் மர்ம நபர்கள் பைக்கில் சென்றபோது வெடிகுண்டை வீசியுள்ளனர். வெடிகுண்டு வெடித்ததில் சம்பவ இடத்தின் அருகே இருந்த காரின் கண்ணாடி உடைந்துள்ளது. இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சிசிடிவி மூலமாக சோதனை செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திடீரென குண்டுவெடித்த சம்பவம் தேனாம்பேட்டை பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.