மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை!
இந்தியாவில் தேர்தல் நடைமுறை தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கும் தென்சென்னை நட்சத்திர தொகுதியாகவும் மிகவும் முக்கியமான தொகுதியாகவும் இருந்து வருகிறது.
மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி. டி. கிருஷ்ணமாசாரி, பேரறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட மிக பெரிய ஆளுமைகளையும் முரசொலி மாறன், டி. ஆர். பாலு, வைஜெயந்தி மாலா உள்ளிட்டோரை மக்களவைக்கு அனுப்பி வைத்த தொகுதி தென்சென்னை தொகுதி.
இவ்வாறான முக்கிய தொகுதியில் இந்த முறையும் முக்கிய பிரபலங்கள் தான் மாறி மாறிப் போட்டியிடவுள்ளனர், திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற தமிழச்சி தங்கபாண்டியன் இந்த முறையும் போட்டியிடவுள்ளார், பாஜக சார்பில் அண்மையில் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய தமிழிசை சவுந்தரராஜன் , அதிமுக சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் என மும்முனை போட்டி நிலவுகிறது.
இதேபோல், விருதுநகர் தொகுதியில் பாஜகவுடன் இணைந்த சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமார், அதிமுக சார்பில் கூட்டணியில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், திமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் போட்டியிடவுள்ளார்.
இவ்வாறு இந்த முறை நட்சத்திர தொகுதியாக மாறியுள்ள தென்சென்னை மற்றும் விருதுநகர் தொகுதியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.