சவுதி அரேபியாவில் 35 வயதான முகமது பின் சல்மான் தான் பொறுப்புக்கு வந்த நாள் முதல் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும் விதமாக பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். ஏமனில் சண்டையிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளின் கமாண்டராக இருந்த இளவரசர் பகாத் பின் துர்க்கி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சவுதி அரேபியாவின் வட மேற்கு பிராந்தியமான அல் ஜூப் ரெஜியோவின் துணை ஆளுநராக இருந்த பகாத் பின் துர்க்கியின் மகனும் இளவரசருமான அப்துல்லா அஜிஸ் பின் பகாத்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. சவுதி ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கு இடமான நிதி பரிவர்த்தனை நடந்ததில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இளவரசர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.