கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!
கோவை ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் உள்ளது. இங்கு பழைய கார்களை வாங்கி வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு பழைய கார்களின் உதிரிபாகங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த குடோனில் உள்ள பழைய கார்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மொத்தமாகத்தான் நிறுத்தி வைப்பார்கள்.
மேலும் அங்கு பழைய கார்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கழிவுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இந்த பழைய கார்கள் பகுதியில் இருந்து புகை வெளியே வந்தது. அதனை பார்த்த குடோன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை, நிலைய அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் உள்ள பஞ்சுகள், டயர்கள் போன்றவற்றில் தீப்பிடித்ததன் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
மேலும் அந்த பகுதியில் மட்டும் பல அடி தூரத்துக்கு கரும் புகை எழுந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து அங்கு பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருந்தது. எனவே கணபதி, பீளமேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் கூடுதலாக வாகனங்கள் அங்கே கொண்டு வரப்பட்டது.
மேலும் தீயணைப்பு வாகனங்களும், தேவையான தண்ணீரும் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் முழுமையாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய கார்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் என ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும் அவற்றின் மதிப்பு மட்டும் பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த குடோன் இருக்கும் பகுதியில் மின்சார வசதி இல்லாத நிலையில் இருந்த போதும் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.