இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி!
கடந்த 2001ஆம் ஆண்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை விமானங்கள் மூலம் தகர்த்தனர். இதனால் கோபமடைந்த அமெரிக்க ராணுவம் அந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது.
அந்த போருக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்த தலிபான்கள் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றினர். அதன்பிறகு, அந்நாட்டில் ஜனநாயக ரீதியில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.
கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதன் மூலம் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் தலிபான் அரசாங்கத்தை உலக நாடுகள் ஏற்கவில்லை.
இதனால், ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உதவியது. அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தது.
இதனையடுத்து, கடந்த 10-ந் தேதியன்று ஆப்கானிஸ்தானுக்கு 50ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமைகளை இந்தியா அனுப்பி இருந்தது. இந்த நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. அதில், மூன்று டன் மருந்துகள் மற்றும் உடைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கு தலிபான்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, இந்தியாவின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் மேம்படுத்துவதை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.