குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 தனுசு
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 ல் வக்கிரம் ஆகி, 18 – 10 2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
அதேபோல் கடந்த 23-5-2021 ல் மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.
அந்த வகையில், தனுசு ராசிக்கு மூன்றாம் இடமான கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுள்ள குரு தற்போது வக்கிரம் அடைந்துள்ளார்.
பொதுவாக மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு நல்ல பலன்களை வழங்க மாட்டார். அதே சமயம் அந்த இடத்தில் வக்கிரம் ஆகியுள்ள குரு பகவன் நிச்சயம் நல்ல பலன்களை வழங்குவார்.
இளைய சகோதர சகோதரிகளுடன் ஏற்பட்ட பிணக்குகள் முடிவுக்கு வரும். அவர்கள் மூலமாக உதவிகளும் கிடைக்கும். பல தடவை தோல்வியடைந்த முயற்சிகள் இனி வெற்றிகளை தரும். தடைபட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தடைபட்ட பயணங்கள் மீண்டும் தொடங்கும். எழுத்து துறையை சார்ந்தவர்கள், நல்ல முன்னேற்றத்தை சந்திப்பார்கள்.
குருவின் பார்வை ராசியின் ஏழாவது இடத்திற்கு கிடைப்பததால், கணவன் மனைவிக்கு இடையே இருந்த அதிருப்தி மறைந்து, இணக்கமான உறவு ஏற்படும்.
பிரிந்திருந்த நண்பர்கள், தொழில் பார்ட்னர்கள் மீண்டும் பழையபடி வந்து சேர்வார்கள். தொழில் ரீதியாக தடைபட்ட பேச்சுக்கள் மற்றும் சந்திப்புகள் மீண்டும் தொடங்கும்.
வீட்டில் தள்ளிப்போன திருமணங்கள், விரைவில் நடக்கும். புதிய தொழில்களுக்கான வைப்புகள் கிட்டும். பொது வாழ்க்கையில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புக்களும் கிடைக்கும்.
குருவின் ஏழாம் பார்வை, ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு கிடைப்பதால், தந்தை வழியில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீக சுற்றுலாக்கள் சென்று வருவீர்கள், ஆலய தரிசங்கள் கிட்டும். சிலருக்கு வெளிநாட்டில் சென்று உயர் கல்வி பயிலும் வாய்ப்பும் ஏற்படும்.
குருவின் ஒன்பதாம் பார்வை, பதினோராம் இடத்திற்கு கிடைப்பதால், இதுவரை சிக்கலாக இருந்த மூத்த சகோதர உறவுகள், இனி நல்லபடியாக அமையும். அவர்களின் உதவிகளும் கிடைக்கும்.
தொழிலில் முடங்கி இருந்த லாபம் கைகளில் வந்து சேரும். வங்கி மற்றும் தனியாரிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மனதில் நீண்ட நாளாக உள்ள ஆசைகளில் ஒன்றிரண்டு நிறைவேறும்.
வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி, தனுசு ராசிக்கு இருந்த சனி, ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து லேசான முன்னேற்றத்தை கொடுத்து இருப்பார். அப்படி எந்த முன்னேற்றமும் இதுவரை கிடைக்கவில்லை என்றால், வக்கிர சனி, அதை செய்து கொடுப்பார்.
பொதுவாக இரண்டாம் இடத்தில் இருக்கும் சனி, பணவரவுகளில் தாமதத்தை தந்தாலும், தடைகளை ஏற்படுத்த மாட்டார். அதனால், பணத்தடைகளை சந்தித்தவர்களுக்கு இனி, பண வரவுகள் கிடைக்கும்.
குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முடிவுக்கு வந்த குதூகலம் பொங்கும். புதிய நகை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.
சனியின் மூன்றாம் பார்வை, ராசியின் நான்காம் இடத்திற்கு விழுவதால், இதுவரை வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சி தடைபட்டு இருந்தால், இனி அந்த தடை விலகும்.
வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவையும் நல்லபடியாக அமையும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து மீண்டு வருவார்கள்.
சனியின் ஏழாம் பார்வை, ராசியின் எட்டாம் இடத்துக்கு கிடைப்பதால், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு மூதாதையரின் சொத்துக்கள் கிடைக்கும். நின்றுபோன, மறைமுக தன வருவாய் மீண்டும் வர தொடங்கும்.
சனியின் பத்தாம் பார்வை, ராசியின் பதினோராம் இடத்துக்கு கிடைப்பதால், இதுவரை உங்களிடம் பகைமை பாராட்டிய மூத்த சகோதர சகோதரிகள் இனி நெருங்கி வந்து அன்பு செலுத்துவார்கள். அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கும்.
தொழிலில் முடங்கி இருந்த லாபம், சிறிது சிறிதாக கைக்கு வர தொடங்கும். வணிகம் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தடைபட்ட உதிரி வருவாய் மீண்டும் வரத் தொடங்கும்.
தனுசுக்கு ஆறாம் இடத்தில் இருக்கும் ராகு, எதிரிகளின் சதி திட்டங்களை முறியடிப்பார். மாற்று இனத்தை சேர்ந்தவர்கள், மாற்று மொழி பேசுபவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
அதேபோல், பனிரண்டாம் இடத்தில் இருக்கும் கேது, நல்ல உறக்கத்தை தர மாட்டார். அடிக்கடி ஞாபக மறதியை ஏற்படுத்துவார். கால்களில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதுவரை, கோச்சார குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.
எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 ரிஷபம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மிதுனம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கடகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கன்னி
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 விருச்சிகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4