தமிழகத்தில் சமீப காலமாக சில கும்பல்கள் போலி செய்திகளை பரப்புவதும், அதன் மூலமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை உண்டாகி அரசு சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கும், சேதம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது.
அத்துடன் சிலர் அரசியல் ரீதியாகவும், தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவரை கண்காணித்து சட்டத்தின் பிடியில் அவர்களை கொண்டு வருவதற்கு தமிழக காவல்துறை திட்டமொன்றை வகுத்துள்ளது.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் மாநகர, மாவட்ட, காவல் துறையின் சமூக ஊடக குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலமாக குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும், காவல்துறைக்கு அவப்பெயரையும், ஏற்படுத்தும் அவர்களை கவனிக்க காவல்துறையின் சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல இணையதளத்தில் பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை, பண மோசடி, உள்ளிட்ட சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை மிகவும் எளிதாக கண்டுபிடிப்பதற்கும், குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட 9 நகரங்களிலும் 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார் சைலேந்திரபாபு.
கணினி சார் திறன் தடைய அறிவியல் ஒழித்தவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும், கணினி சார் குற்றங்களை வழக்குகளாக பதிவு செய்து, அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கும், இந்த குழு துரிதமாக செயல்படும். குறிப்பாக இந்த குழு முன்னெடுக்கும் நடவடிக்கையின் மூலமாக, சாதி மத அரசியல் மோதல்களை தடுக்கவும், உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.