Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மெர்சல் படத்தில் வரும் 5 ரூபாய் டாக்டர் நிஜத்தில் காலமானார்! ஸ்டாலின், முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்

வியாசர்பாடியைச் சேர்ந்த புகழ் பெற்ற 5 ரூபாய் டாக்டர் என அறியப்படும் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார். அவருக்கு வயது 70.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியிலும் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, சிகிச்சைக்கான கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவர் 1973-ல் ஸ்டான்லி மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பயின்றதால், மக்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்க வேண்டுமென விரும்பி, முதலில் 2 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்தார். பிறகு அவர் 5 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

விஜயின் மெர்சல் படத்தில் வரும் 5 ரூபாய் டாக்டர் என அறியப்படும் அந்த கேரக்டரின் முன்மாதிரியாக இவர்தான் உண்மையில் இருந்துள்ளார்.

இவரது மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “2 ரூபாயில் இருந்து 5 ரூபாய்க்கு மட்டுமே சிகிச்சை பார்த்த ‘மக்கள் டாக்டர்’ மருத்துவர் திருவேங்கடம்” என அந்த செய்தியில் குறிப்பிட்டு தனது இரங்கல் செய்தியினைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து, இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது, பொது மக்களுக்கும், சாதாரண மக்களுக்கும் வெறும் 5 ரூபாயில் சிகிச்சை அளித்து வந்த பெருமைக்குரியவர். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது” என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version