விரைவில் தொடங்குகிறது தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்! பணிகள் மும்முரம்!

0
121

இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பமானது. ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.

இந்த 2 நாட்களில் அந்தக் கூட்டத் தொடரில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் எதிர்ப்பு சட்டமசோதாவை ஆளுநர் ரவி மறுபடியும் மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

ஆகவே அந்த மசோதாவை மறுபடியும் நிறைவேற்றுவதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் சென்ற மாதம் 8ம் தேதி நடந்தது. அன்றைய தினமே அந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வருடம் தோறும் மார்ச் மாதத்தில் மாநில நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆகவே தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. அதற்காக தொழில்நிறுவனங்கள் வர்த்தகங்கள் மற்றும் அந்தந்த சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

அதோடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்காக வேளாண்மை துறை தீவிரம் காட்டி வருகிறது. வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மற்றும் அது தொடர்பான நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து அவர்களுடைய கருத்துக்களை வேளாண்மைத்துறை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இந்த மாதம் 3வது வாரத்தில் தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 18ஆம் தேதியன்றும், வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கை 19ஆம் தேதியன்றும் தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நீதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் , வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களும் தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அதுகுறித்து உறுதியை வழங்கியிருக்கிறார்.

ஆகவே அதனை இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்காக அமைச்சரவை கூட்டம் மிக விரைவில் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மீது எதிர்கட்சியினர் வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுக்கள், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உட்பட பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் வெளிநடப்பு உள்ளிட்டவை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் ஆளும் கட்சி எதிர்க் கட்சிக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் காரணமாக, எதிர்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கடும் கோபத்தில் இருப்பதால் இந்த நிதிநிலை அறிக்கையின் தமிழக சட்டசபை கூட்டம் முழுமையாக நடைபெறுமா? அல்லது எதிர்க்கட்சியினரின் அமளியால் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்படுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

ஆனாலும் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அடுத்த வாரத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர், உள்ளிட்டோரின் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

கடந்த 2018 ஆம் வருடத்தில் இந்த மாநாட்டை சென்ற அதிமுக அரசு நடத்தி இருந்தது. அதன் பிறகு 4 ஆண்டு காலமாக இது நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே திமுகவின் ஆட்சியில் நடத்தப்படும் முதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு இதுதான் என்று தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரம் 3 நாட்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. முதல் நாளில் மாவட்ட ஆட்சியர்கள் 2வது நாளில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும் 3வது நாளில் 2 தரப்பினரையும் இணைக்கும் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த மாநாட்டின் ஆரம்பத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உரை நிகழ்த்துவார் என்று தெரிகிறது, அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கின்ற தொய்வு நிலை உள்ளிட்டவற்றை இந்த மாநாட்டின் தலைமை செயலாளர் சுட்டிக்காட்டி பேசுவது வழக்கமாக நடைபெறுவது என தெரிகிறது.

தொடக்க உரை மற்றும் நிறைவுரை போன்றவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்த்துவார் அப்போது பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.