ஐபிஎல் டிக்கெட் தொடர்பான கருத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் பெயரை குறிப்பிட்டு பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட் குறித்து மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் இன்று பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரின் பெயரை விமர்சனம் செய்தோ, கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை.
திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார். அதில் என்ன தவறு உள்ளது. தவறாக இருந்தால் நீக்க தயாராக இருக்கிறோம், என்றார்.
இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அவர் பெயர் இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன்”, என்றார்.
பின்னர் மீண்டும் பேசிய முதலமைச்சர், “அவர் பெயர் தகாத வார்த்தையா? சொல்லுங்கள். மத்திய அமைச்சரின் பெயர் தகாத வார்த்தையா? எதற்காக அவை குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறீர்கள்? என கூறினார்.
இதனால் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.